அருமந்தமான அருகம்புல்
by Ranjini Kannankurukkal on Wednesday, June 15, 2011 at 10:29am
“ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க” இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள்.ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்
1.Tamil - arukampul
2.English - Bermuda grass,
3.Telugu - Garika gaddi,
4.Malayalam - Karuda pullu,
5.Sanskrit - Doorwa,
6.Botanical Name - Cynodon dactylon
அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என்று வேறு பெயர்களிலும் இது அழைக்கப் படுகிறது.அருகில் நான்கு வகைகள் உள்ளன.
1) யானை அருகன், 2) சிறு அருகன், 3) பெரு அருகன், 4) புல் அருகன்.
யானை அருகன்
யானை அருகனில் தண்டு பெரியதாக இலை நீண்டு தண்டு மூட்டுக்கள் நீளமாகவும், உயரமாகவும் இருக்கும். மழைக்காலங்களில் செழிப்பாக வளரும்.இந்த யானை அருகனை சித்தர்கள், ஞானிகள், அறிவு சார்ந்த மருத்துவர்கள் பயன்படுத்தினார்கள். இது மற்ற மருந்துகளுடன் துணை மருந்தாக பயன்படுகின்றது.
புல் அருகன்
விநாயகருக்கு அணிவிக்கும் மாலை புல் அருகன் ஆகும். இவை எல்லா இடங்களிலும் பரந்து காணப்படும்
சிறு அருகன், பெரு அருகன்
இவை இரண்டுக்கும் தோற்றத்தில் சிறிய வித்தியாசம் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.அருகின் மருத்துவப் பயன்கள் அனைத்து உயிரினங்களுக்கும் தெரியும். உதாரணமாக நாய்க்கு நோய்வந்தால் அது அருகம்புல்லை உண்ணும். அதுபோல் பாம்பினால் கடிபட்ட கீரி அதன் விஷத்தை நீக்க அருகின் மேல் புரளும்.
அருகம்புல்லின் சமூலத்தை (இலை,வேர், தண்டு) எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து பாத்திரத்தில் உறையவைத்தால் மாவு போன்று வெண்மையாக உறையும். இந்த மாவுப்பொருள் பாலைவிட வெண்மையாகக் காணப்படும்
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
கண் நோய் அகல
கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.
குழந்தைகளுக்கு
பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகின் மருத்துவக் குணங்களை அகத்தியர் பாலவாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார். குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்தாக உள்ளதால் இதை குருமருந்து என்றும் கூறுகின்றனர். ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்·
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
* மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.
* அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.
* நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.
* அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.
நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen