Dienstag, 3. Januar 2012


கொடைகாண வேண்டுமென்றும் அருளைச் சிந்தும்
குளிர்ந்தவிழி தனைக்காண வேண்டு மென்றும்,
நடைகாண வேண்டுமென்றும், இதழ்கள் சிந்தும்
நகைகாண வேண்டுமென்றும், உடல்உ டுத்தும்
உடைகாண வேண்டுமென்றும் தமிழ்மு கத்தின்
ஒளிகாண வேண்டுமென்றும், புகழ்தல் கேட்டுத்
தடைகாண நினத்தாயோ அவர்க்கு நீ தான்?
தற்பெருமை தேடுகின்ற சாவே, சொல்! சொல்!

இல்லாதார் இயலாதார் பசியைப் போக்க
எத்தனையோ சத்திரங்கள் கட்டு வித்தார்;
எல்லாரும் இன்புற்றே இருக்கும் வண்ணம்
எத்தனையோ கலைக்கூடம் கட்டு வித்தார்;
கல்லார்உள் ளார்இந்த நாட்டில் என்னும்
கறைநீங்க ஒளிஓங்கப் பள்ளி யோடு
கல்லூரி கட்டுவித்தார்; அவர்க்கு நாங்கள்
கல்லறையைக் கட்டுவிக்க லாமா, கூறு?

வாடிப்போய்க் கிடக்கின்ற செடிக ளைப்பார்;
வதங்கிப்போய்க் கிடக்கின்ற கொடிக ளைப்பார்;
ஆடிப்போய் நின்(று) அவர்முன் மகிழ்ச்சி தந்த
அழகுமயில் சிலைமயிலாய் ஆன தைப்பார்;
ஓடிப்போய் அவர்முன்னர் கூவிக் கூவி,
உளங்கவர்ந்த குயில்ஊமை ஆன தைப்பார்;
பாடிப்போய்க் காட்டுதற்குத் தலைவர் இன்றிப்
பரிதவிக்கும் என்னைஇதோ பார் பார் சாவே!

Keine Kommentare:

Kommentar veröffentlichen