Dienstag, 3. Januar 2012

கங்குலிலே முகங்காட்டும் மீன் இனத்தைக்
கண்டுநகை புரிந்ததனால் வெகுண்டாய் போலும்!
திங்களுக்குப் பெருமைதர நினைத்தாய் போலும்!
திட்டமிட்டு நல்லுயிரைப் பறித்து விட்டாய்!

பட்டமரம் வெட்டுண்டால் பரவா யில்லை;
பாதத்தில் தைக்கின்ற முள்வ ளர்க்கும்
நெட்டைமரம் வீழ்ந்திட்டால் கவலை யில்லை;
நிழல்நாடி நிற்போர்க்கு மயக்கம் நல்கும்
கெட்டமரம் - நச்சுமரம் நிலத்தில் வெட்டிக்
கிடந்திட்டால் வருத்தமில்லை; ஆனால் உன்கை
தொட்டமரம் வாழைமரம் - கனிப ழுத்துத்
தொங்கிக்கொண் டிருந்தமரம் - வீழ்த்த லாமா?

உன்னைநான் பழிக்கின்றேன் என்று, சாவே
ஒருபோதும் கருதாதே! கேட்டி ருத்தால்
என்னைநான் கொடுத்திருப்பேன்; அதனை விட்டே
ஏன் அந்தத் தேன் உயிரைப் பறித்தாய்? ஓ!ஓ!
மன்னர்தான் கொடுப்பதற்கு முடியும் என்று
மறக்காமல் அவர்வாழ்ந்த மனைபு குந்து
பொன்னைப்போல் பொருளைப்போல் ஆவி வாங்கிப்
புறப்பட்டுப் போனாயோ? சாவே! சொல்! சொல்

ஏராண்டு வாளாண்டு செழித்தி ருக்கும்
இசைச்சீமை சிவகங்கைச் சீமை என்னும்
பாராண்டு கொண்டிருந்த வேந்தை நீயோ
பரிசாகப் பெற்றுவிட்டாய்; எங்க ளுக்கோ
நீராண்டு கொண்டிருக்கும் விழியும், துன்ப
நெருப்பாண்டு கொண்டிருக்கும் நெஞ்சும் தந்தாய்
ஒராண்டு முடிந்தாலுங் கூட, சாவே
உன்கொடிய பரிசை யாம் இழக்க வில்லை!

பாரி உயிர் கவர்ந்துசென்று வேளை அந்தப்
பறம்பரசன் இளமகளிர் கண்ணீர் மையில்
தூரிகையைத் தொட்டெழுதி வைத்துச் சென்ற
துயர்ப்படத்தைக் கண்டிருப்பாய்; இல்லை யாசொல்?
கூரியகண் உனக்குண்டே - கண்டி ருப்பாய்;
கொடுமையினை ஏன்தொடர்ந்தாய் கண்ட பின்னும்?
மாரியுடன் போட்டியிடும் எவரை யும்நீ
மாய்த்துவிடு வாய்போலும் விரைவில், சாவே!

Keine Kommentare:

Kommentar veröffentlichen