ஐ.நாவிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களை அபகரிக்க சிறிலங்கா முயற்சி
உள்ளக விசாரணைகளுக்குத் தேவை என்று கூறி, ஐ.நாவிடம் உள்ள போர்க்குற்றச் சாட்சியங்கள், ஆதாரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்அடிப்படையில் சிறிலங்காப் படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூல மற்றும் எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு ஐ.நாவிடம் சிறிலங்கா அரசு கோரவுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணைக்கு போர்க்குற்றங்கள் பற்றிய சாட்சியங்கள் அவசியமானவை என்று சிறிலங்கா அரச அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த போர்க்குற்றச் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஐ.நா விதித்துள்ள தடை, சிறிலங்காவின் விசாரணைகளுக்கு தடையாக அமையக் கூடாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தத் தகவல்களை அவர்கள் தமது முயற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சிறிலங்காவின் உயர்மட்ட அரச அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வாய் மூல மற்றும் எழுத்து மூலமான போர்க்குற்றச் சாட்சியங்களை 20 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா நிபுணர்குழுவிடம் 2300 பேர் 4000 சாட்சியங்களை அளித்திருந்தனர். இந்தச் சாட்சியங்களையே சிறிலங்கா அரசு பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.
உயர்ந்தபட்ச இரகசியம் பேணப்படும் என்ற நம்பிக்கையிலேயே இந்த போர்க்குற்ற சாட்சியங்கள் பெறப்பட்டன என்பதாலும், இவை பகிரங்கப்படுத்தப்பட்டால், சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதாலும், இவற்றை வெளியிட 20 ஆண்டுகளுக்கு வெளியிடக் கூடாது என்று ஐ.நா நிபுணர்குழு பரிந்துரைத்துள்ளது.
ஆனால் உள்ளக விசாரணைகளுக்கு இந்தச் சாட்சியங்கள் தேவை என்று கூறி ஐ.நாவிடம் உள்ள இந்த ஆதாரங்களை அபகரிக்கும் முயற்சியில் சிறிலங்கா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நாவிடம் உள்ள இந்த போர்க்குற்ற ஆதாரங்கள் சிறிலங்கா அரசின் கைகளில் சிக்கினால் போர்க்குற்ற சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
அத்துடன் வரும் காலங்களில் உள்ளக அல்லது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் போது, அதற்குச் சாட்சியாக இருந்த எவரும் சாட்சியமளிக்க முன்வரமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்தாய்
Keine Kommentare:
Kommentar veröffentlichen