Mittwoch, 4. Januar 2012

 விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு வலுவான நிலையில் உள்ளது: கோதபாய ராஜபக்ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் உள்ளதாகவும், இவர்களிடம் பாரியளவு நிதி காணப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் பல்வேறு நாடுகளில் இயங்கி வருவதுடன் ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் என பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாகத் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தொழில்சார் நிபுணர்கள் ஒன்றிய ஒன்றுகூடல் வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் வலுவான சக்திகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், சனல் 4 மற்றும் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடக நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரசாரங்களில் இறங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உள்ளக அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தவும், ஸ்திரத்தன்மையை சீர் குலைக்கவும் தொடர்ந்தும் சில சக்திகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்பதனை தொழில்சார் நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பல்வேறு தியாகங்களைச் செய்து ஈட்டப்பட்ட சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து நாம் வழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக சில நாடுகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen